திருப்பதியில் தயாரிக்கப்படும் ஊதுபத்திக்கு அமோக வரவேற்பு : மேலும் 15 வகையான பொருட்கள் விற்பனைக்கு வந்தது!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2022, 8:21 pm
ஆந்திரா : ஊதுபத்தி விற்பனையில் கிடைத்த பெரும் வெற்றியை தொடர்ந்து பஞ்சகவ்யம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 15 வகையான வீட்டு உபயோக பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் சுவாமி அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் மலர்களை முக்கிய மூலப்பொருளாக கொண்டு தேவஸ்தான நிர்வாகம் ஏழு வகையான ஊது பத்திகளை தயார்செய்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் பொதுமக்களிடையே விற்பனைக்கு கொண்டு வந்தது.
திருப்பதி மலையில் விற்பனை செய்யப்படும் தேவஸ்தானத்தின் ஊதுபத்திகளை பக்தர்கள் போட்டி போட்டு பெட்டி பெட்டியாக வாங்கி செல்கின்றனர். இதற்கிடையே மலர் உலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேப்பர் வெயிட், பென்சில் ஸ்டாண்ட் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தேவஸ்தானம் தயார் செய்து அவற்றையும் பொதுமக்களிடம் தேவஸ்தானம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் திருப்பதியில் நடைபெற்ற கோ மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பஞ்சகவ்யத்தை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயார் செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப உதவியுடன் திருப்பதியில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நாட்டு பசுக்களின் சாணம்,கோமியம், பால், தயிர், நெய் ஆகிய பஞ்சகவ்ய பொருட்களை அடிப்படையாக கொண்டு ஊதுபத்தி, சாம்பிராணி கப், சாம்பிராணி கோன், விபூதி, மூக்கில் விடும் சொட்டு மருந்து, வரட்டி, சாணம் ஆகியவை உள்ளிட்ட 15 விதமான பொருட்களை தேவஸ்தான நிர்வாகம் தயாரித்தது.
அவற்றை இன்று முதல் தேவஸ்தானம் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தேவஸ்தான உற்பத்தி செய்துள்ள பஞ்சகவியா உற்பத்திப் பொருட்களில் தூப சூரணம் 50 கிராம் 70 ரூபாய், தரணி ஊதுபத்தி 12 குச்சி 60 ரூபாய், 24 குச்சி 110 ரூபாய் தாத்திரி தூப கப் ஆறு 70 ரூபாய், 12 கப் 120 ரூபாய், வராகி தூப கோன் 12 ரூ.30. 24 கோன் 50 ரூபாய். விபூதி 10 கிராம் 30 ரூபாய், 30 கிராம் 40 ரூபாய், 50 கிராம் 60 ரூபாய், 100 கிராம் 100 ரூபாய், பல் பொடி 50 கிராம் 40 ரூபாய், 100 கிராம் 60 ரூபாய், ஹிரன்மை முகப்பூச்சு 50 கிராம் 110 ரூபாய். 100 கிராம் 200 ரூபாய், மகி சோப் 25 கிராம் 40 ரூபாய், 70 கிராம் 80 ரூபாய், 100 கிராம் 110 ரூபாய். ஷாம்பூ 5மில்லி கிராம் 10 ரூபாய். 100 மில்லி கிராம் 210 ரூபாய். மூக்கில் விடும் சொட்டு மருந்து 10 மில்லி 100 ரூபாய். தரை சுத்தம் செய்யும் திரவம் ஒரு லிட்டர் 250 ரூபாய், 5 லிட்டர் 1,050 ரூபாய். 10 வரட்டி 140 ரூபாய், 12 வரட்டி 170 ரூபாய் என்று தேவஸ்தான விலை நிர்ணயம் செய்துள்ளது.