மேற்குவங்க அமைச்சர்கள் இருவர் கைது..! சிபிஐ அலுவலகம் முன்பு திரண்ட திரிணாமுல் கட்சியினர்..! பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்..!

17 May 2021, 2:39 pm
Mamata_Banerjee_UpdateNews360
Quick Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை அடைந்து இரண்டு அமைச்சர்கள் உட்பட திரிணாமுல் கட்சியினர் நான்கு பேரின் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கி, அவரையும் கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளார். சிபிஐ தனது ஊழல் தடுப்பு கலத்தின் அலுவலகம் உள்ள ‘நிஜாம் அரண்மனையின்’ 15 வது மாடிக்கு முதல்வர் விரைந்தார்.

“தீதி (பானர்ஜி) தனது கட்சி சகாக்கள் விடுவிக்கப்படும் வரை அல்லது அவரும் கைது செய்யப்படும் வரை இந்த சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டார்” என்று மம்தா பானர்ஜியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அனிந்தியோ ரவுத் காத்திருக்கும் ஊடக நபர்களிடம் கூறினார்.

கட்டாய முன்னறிவிப்பின்றி நான்கு தலைவர்களையும் கைது செய்துள்ளதாக மம்தா பானர்ஜி சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதில் இருவர் தற்போது மம்தா அரசில் அமைச்சராக உள்ளவர்கள் மற்றும் இருவர் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த கைதுகள் அரசியல் நோக்கம் கொண்டவை மற்றும் சட்டவிரோதமானவை. ஒரே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போதிலும் சுவேந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்” என்று மம்தா பானர்ஜியை மேற்கோள் காட்டி ரவுத் கூறினார்.

இதற்கிடையே சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அவர்கள் சி.பி.ஐ மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது அவர்கள் கல் வீசி வன்முறையிலும் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்த வேண்டியிருந்தது.

திரிணாமுல் கட்சியினரின் வன்முறையைக் கட்டுப்படுத்த பின்னர் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள நிஜாம் அரண்மனையில் உள்ள மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். கொல்கத்தா காவல்துறையினரும் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

இன்று முன்னதாக, மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் நாரதா ஸ்டிங் வழக்கு தொடர்பாக சிபிஐ’யால் கைது செய்யப்பட்டனர். 
ஆளுநர் ஜகதீப் தங்கர் சமீபத்தில் நான்கு தலைவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை இறுதி செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மித்ராவின் மகன் ஹக்கீமின் மகள், சாட்டர்ஜியின் மனைவி ஆகியோரும் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றனர்.

2014 ஆம் ஆண்டில் நாரதா டிவி செய்தி சேனலின் மேத்யூ சாமுவேல் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதில் திரிணாமுல் கட்சி அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை ஒத்த சிலர் ஒரு கற்பனையான நிறுவனத்தின் பிரதிநிதிகளிடமிருந்து லஞ்சம் பெறுவது கேமராவில் பதிவு செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னர் இந்த நாடாக்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2017 மார்ச் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 121

0

0