உத்தரகண்ட் முதல்வர் பதவியிலிருந்து திரிவேந்திர சிங் நீக்கம்..? பாஜக தலைமை திட்டம்..!
8 March 2021, 2:24 pmஉத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியிலிருந்து திரிவேந்திர சிங் ராவத்தை நீக்க பாஜக மத்திய தலைமை திட்டமிடுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் இன்று பிற்பகல் டெல்லிக்கு சென்று கட்சியின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“திரிவேந்திர சிங் ராவத் டெல்லியில் மத்திய பாஜக தலைவர்களை சந்திப்பார்” என்று உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநில கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் ராவத் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், கட்சி சனிக்கிழமை இரண்டு மத்திய தலைவர்களை உத்தரகண்டிற்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தேசிய துணைத் தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் மற்றும் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் மாநிலக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பெற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநிலத்திற்கு இரண்டு மூத்த தலைவர்களை அனுப்ப பாஜக முடிவு செய்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமன் சிங் மற்றும் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்களுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இதன் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் மோடி அலையால் 70 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் பாஜக 57 இடங்களை வென்றது. தேர்தலுக்குப் பிறகு தான் திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0
0