அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் குலுங்கிய துருக்கி.. 1300 பேர் பலி : உதவிக்கரம் நீட்டும் இந்தியா!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 5:59 pm

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். நிலநடுக்கத்தால் சுமார் 1,300- பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 100 பேர் கொண்ட 2 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழு விரைவில் அன்காரா விரைகிறது. அன்காராவில் உள்ள இந்திய தூதரகம், இஸ்தான்புலில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?