மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

Author: Udhayakumar Raman
25 June 2021, 9:34 pm
Quick Share

மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை டிவிட்டர் நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு முடக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில்,டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு புதிய சட்ட விதிகளை வகுத்துள்ளது. இந்தியாவின் சட்ட திட்டங்களை பின்பற்றினால் மட்டுமே, சமூக வலைதள நிறுவனங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியும் என, மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.மத்திய அரசின் புதிய சட்டத்திட்டங்களை ஏற்றுக் கொள்வதாக, வாட்ஸ் அப், பேஸ்புக் நிறுவனங்கள் அறிவித்த நிலையில், டிவிட்டர் நிறுவனம் மட்டும் கால அவகாசம் கேட்டது. பல முட்டல் – மோதல்களுக்கு இடையே, ஒரு வழியாக, மத்திய அரசின் புதிய சட்டத்திட்டங்களை ட்விட்டர் நிறுவனமும் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இன்று, பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை, டிவிட்டர் நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது. இது குறித்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்ட விதிகளை பின்பற்றாததால், எனது டிவிட்டர் கணக்கு சில மணி நேரங்களுக்கு முடக்கப்பட்டதாக, டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பின்னர் மீண்டும் இயங்க தொடங்கியது.

டிவிட்டர் கணக்கை முடக்குவதற்கு முன்னர், எனக்கு எந்தவித நோட்டீசும் அளிக்கப்படவில்லை.மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 276

0

0