மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி கன்னடர்..! உத்தவ் தாக்கரே வரலாறு படிக்கணும்..! கர்நாடக துணை முதல்வர் கடும் தாக்கு..!

1 February 2021, 4:47 pm
Chhatrapati_Shivaji_Maharaj_UpdateNews360
Quick Share

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஒரு கன்னடர் என்று கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்தார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான எல்லை மோதலைப் பற்றி பேசியதற்காக கர்ஜோல் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேயையும் தாக்கினார்.

“தாக்கரேக்கு வரலாறு தெரியாது. கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள சோராட்டூரைச் சேர்ந்த சிவாஜியின் முன்னோடி பெல்லியப்பா ஒரு கன்னடர் ஆவார். வறட்சி கடக்கில் தாக்கியபோது, பெல்லியப்பா மகாராஷ்டிராவுக்கு குடிபெயர்ந்தார். சிவாஜி பெல்லியப்பாவின் நான்காவது தலைமுறை” என்று கர்ஜோல் கர்நாடகாவின் பெலகாவியில் ஊடகங்களிடையே கூறினார்.

ஜனவரி 27 அன்று, மும்பையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தாக்கரே மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பற்றி பேசினார். கர்நாடகாவில் கார்வார், பெலகாவி, நிப்பானி போன்ற மராட்டிய மொழி பேசும் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக உத்தவ் தாக்கரே, “இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது, கர்நாடக அரசு பெல்காமை பெலகாவி என மறுபெயரிட்டு, அதன் இரண்டாவது தலைநகராக அறிவித்து, சட்டமன்றக் கட்டடத்தை அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அங்கு ஒரு சட்டமன்றக் கூட்டத்தை நடத்துகிறது. இது நீதிமன்ற அவமதிப்புஇல்லையா?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கர்ஜோல், 1968’ஆம் ஆண்டில் மகாஜன் கமிஷனின் அறிக்கையை நிப்பானி, பெலகாவி, கார்வார் மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள 800 கிராமங்கள் குறித்த கர்நாடகாவின் கூற்றை உறுதிப்படுத்தினார். மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கத்திற்குள் நடக்கும் மோதலில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் பொருட்டு தாக்கரே இந்த விஷயத்தைத் தூண்டுவதாக அவர் கூறினார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து நவம்பர் 28, 2019 அன்று மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“சிவசேனாவின் சின்னமாக விளங்கும் மராட்டிய மன்னரான சிவாஜி, அடிப்படையில் ஒரு கன்னடர் என்பதை தாக்ரே இப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று கர்ஜோல் வலியுறுத்தினார்.

மற்றொரு கர்நாடக துணை முதல்வர் லக்ஷ்மன் சவாடி, கர்ஜோலை கருத்தை ஆதரித்தார். மேலும் மும்பை கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் வரை மும்பை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது பெலகாவி அப்போதைய பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று சவாடி மேலும் கூறினார்.

Views: - 0

0

0