யுஜிசி-நெட் தேர்வு 2020 மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு..! மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

20 April 2021, 6:14 pm
UGC_NET_Exam_Postponed_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு யுஜிசி-தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று அறிவித்தார்.

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை யுஜிசி-நெட் தேர்வு நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய யுஜிசி-நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, மே 2 முதல் மே 17 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதோடு, வரக்கூடிய மூன்று வாரங்கள் மிக கடினமான ஒன்றாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளாதால், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒன்று அங்கமாக யுஜிசி-நெட் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு ட்வீட்டில் “கொரோனா பாதிப்பால் தேர்வர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மனதில் கொண்டு, யுஜிசி-நெட் டிசம்பர் 2020 (மே 2021) தேர்வுகளை ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அளித்த உத்தரவின்படி, தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகள், தேர்வுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

“கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலைமையைப் பார்த்து, தேர்வர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, யுஜிசி-நெட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று என்.டி.ஏ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 80

0

0