சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்..! பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒடிசாவில் கைது..!
21 August 2020, 4:25 pmஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் மைனர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, குழந்தைகளுக்கான தங்குமிடம் ஒன்றை நடத்தி வந்த 68 வயதான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பழங்குடி மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் ஃபெய்த் அவுட்ரீச் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர் ஜான் பேட்ரிக் பிரிட்ஜ் என அடையாளம் காணப்பட்டார்
இவர் 1992’ல் இந்திய குடியுரிமையைப் பெற்றார்.
காந்தமால் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜான் பேட்ரிக் பிரிட்ஜ் நடத்திய தங்குமிடத்தில் வசித்து வந்த சிறுவனிடம் துஷ்பிரயோகம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
“ஜார்சுகுடா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று ஜார்சுகுடா காவல் கண்காணிப்பாளர் ராகுல் பி.ஆர். தெரிவித்தார்.
ஆதாரங்களின்படி, நியூசிலாந்தை தளமாகக் கொண்ட ஃபெய்த் அவுட்ரீச் நிறுவனம் வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் விசாரணை நடத்தியது.
நிதி துஷ்பிரயோக விசாரணையின் போது, எதிர்பாராத விதமாக இந்த பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.