டெல்லி கலவர வழக்கு..! உமர் காலித்துக்கு அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவல்..!

25 September 2020, 9:12 am
umar_khalid_updatenews360
Quick Share

கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த சிஏஏ எதிர்ப்பு வன்முறை தொடர்பான வழக்கில் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவர் உமர் காலித்தை டெல்லி நீதிமன்றம், அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது.

கடந்த பிப்ரவரி 24’ம் தேதி வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான இந்த வன்முறையில் 53 மேற் உயிரிழந்த நிலையில் 200’க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

இந்த கலவரத்திற்கு திட்டமிட்டு கூட்டு சதி செய்ததாக உமர் காலித் மற்றும் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உமர் காலித் கடந்த செப்டம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார்.

பின்னர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்றுடன் அவருடைய போலீஸ் காவல் முடிவடைகிறது. இதையடுத்து வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் முன் காலித் ஆஜரானார். 

காவல்துறையினர் மீண்டும் போலீஸ் காவல் கோராததால் அவர் அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரில், டெல்லி வகுப்புவாத வன்முறை ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று போலீசார் கூறியுள்ளனர். இது காலித் மற்றும் இருவரால் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேசத்துரோகம், கொலை, கொலை முயற்சி, மதம் மற்றும் கலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றங்களுக்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து சர்வதேச அளவில் பிரச்சாரங்களை பரப்புமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையின் போது காலித் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கியதாகவும், குடிமக்கள் வீதிகளில் வந்து சாலைகளைத் தடுக்கும்படியும் கேட்டுக்கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 6

0

0