சர்வதேச வணிகத்திற்கு கடல் மிக முக்கியமாக இருக்கிறது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

Author: kavin kumar
9 August 2021, 11:09 pm
Quick Share

டெல்லி: கடல் வழித்தடங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த பிரதமர் மோடி, கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய ஐந்து அம்ச திட்டத்தையும் முன்மொழிந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கடல் என்பது அனைத்து நாடுகள் மத்தியிலும் பகிரப்பட்ட ஒன்று என்றவர் கடல் வழித்தடங்கள் தான் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடி என்று குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நமது உலகத்தின் எதிர்காலத்திற்குக் கடல் போக்குவரத்து முக்கியமானது. ஆனால் பல முனைகளில் சவால்களைக் கடல் எதிர்கொள்கிறது. கடற் கொள்ளை மற்றும் பயங்கரவாதத்திற்காகக் கடல் வழித்தடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு நாடுகளுக்கு இடையே கடல்சார் பிரச்சினைகள் உள்ளன. இது மட்டுமின்றி காலநிலை மாற்றமும் முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது” என்றார்.

சர்வதேச நாடுகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்றவர், தனது உரையில் ஐந்து அம்ச திட்டத்தையும் முன்மொழிந்துள்ளார். மேலும், இது போன்ற திட்டத்தை எந்த ஒரு நாடும் தனியாக முன்னெடுக்க முடியாது என்றவர், அதற்கு நம் அனைவரது கூட்டு முயற்சிகளும் தேவை என்றார். இதற்காகத் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஐந்து அம்ச திட்டத்தை முன் வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “கடல் வர்த்தகத்தைப் பொறுத்தே சர்வதேச வணிகம் அமைந்துள்ளது. கடல் வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சினைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடியது. கடல்சார் வர்த்தகம் என்பது எப்போதுமே இந்தியாவின் நாகரிக நெறிமுறையின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, கடல் வர்த்தகத்திற்கான தடைகளை அகற்றுதல் இதில் மிகவும் முக்கியமான ஒன்று.

இரண்டாவது சர்வதேசச் சட்டத்தின்படி அமைதியான முறையில் கடல்சார் மோதல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். வங்கதேசத்துடன் ஏற்பட்ட கடல்சார் பிரச்சினைகளை இந்தியா அமைதியான முறையில் தீர்த்துக் கொண்டது. மற்ற நாடுகளின் உரிமைகளையும் நாம் இதில் மதிக்க வேண்டியது அவசியம். மூன்றாவதாக இயற்கை பேரழிவுகள் மற்றும் கடற்கொள்ளைகளை எதிர்த்து அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். 2008ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறோம். மேலும், பவ்வேறு நாடுகளுக்கும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளும் அளித்துள்ளோம்.

அடுத்தது கடல் வளங்களைப் பாதுகாப்பது. காலநிலை மாற்றம் காரணமாகக் கடல்கள் நேரடியாகப் பாதிக்கின்றன. எனவே, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எண்ணெய் கசிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது நமது பொறுப்பு. வரையறை இல்லாமல் மேற்கொள்ளப்படும் மீன்பிடித்தலைத் தடுக்க கூட்டு நடவடிக்கைகள் தேவை. இதற்கு அனைத்து நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு கட்டாயம் தேவை.கடைசியாகப் பொறுப்புள்ள கடல் உள்கட்டமைப்பை ஊக்குவிக்க வேண்டும். அதாவது கடல் வர்த்தகத்தை அதிகரிக்க முறையான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். இது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களைப் பின்பற்றி உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்து நாடுகளின் பங்களிப்புடன் ஏற்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Views: - 246

0

0