உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!
2 August 2020, 5:14 pmமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அவர் மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
“கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்தேன். அறிக்கையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.” என்று இந்தியில் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,700 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 17 லட்சத்தை எட்டியுள்ளன.