சமாஜ்வாதியில் இணைந்தார் உ.பி. அமைச்சர்கள் : சிவப்பு கம்பளம் விரித்த அகிலேஷ்…!!

Author: Udhayakumar Raman
14 January 2022, 5:27 pm
Quick Share

உத்தரபிரதேசத்தில் பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 7 பேர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே,அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் எம்.எல்.ஏ.க்களாக இருந்த பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் ஷர்மா உள்ளிட்ட 7 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சுவாமி பிரசாத் மவுரியா இன்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பா.ஜ.க.வில் இருந்து விலகிய தரம் சிங் சைனி, பகவதி சாகர், வினய் ஷக்யா உள்ளிட்டோரும் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அதிர்ச்சியையும், கலக்கத்தையும் அளித்திருப்பதாக தெரிகிறது.பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பின்னடைவால் அக்கட்சியின் மேலிடம் மிகுந்த கவலைகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.அகிலேஷ்யாதவ் அவர்களை வரவேற்றதுடன் சமாஜ்வாதி கட்சி கொடி வண்ணமான சிவப்பு நிற தலைப்பாகையை அவர்களுக்கு சூட்டி மகிழ்ந்தார். இதனிடையே அந்த விழாவில் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் அகிலேஷ்யாதவ் தான் என்றும் 2024-ம் ஆண்டு அகிலேஷ் தான் பிரதமர் எனவும் தெரிவித்தார். இதர பிற்படுத்தப்பட்டோரின் நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டதாக சுவாமி பிரசாத் மவுரியா கூறினார்.

Views: - 181

0

0