தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உறுதி..! யோகி ஆதித்யநாத் அதிரடி..!

Author: Sekar
2 October 2020, 5:48 pm
Yogi_Adityanath_UpdateNews360
Quick Share

ஹாத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தை தனது நிர்வாகம் கையாண்ட விதம் குறித்து அதிருப்திகள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அரசாங்கம் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு உறுதியளித்துள்ளார்.

பெண்களின் கௌரவத்திற்கு தீங்கு விளைவிக்க விரும்புவோருக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர், முன்மாதிரியான தண்டனையை அரசாங்கம் உறுதி செய்யும் என்றார். 

உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் தலித் பெண், கடந்த செப்டம்பர் 14’ஆம் தேதி சில கயவர்களால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதோடு, நாக்கை துண்டித்து, கழுத்தை நெரித்து மிக மோசமான துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இதையடுத்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் செவ்வாயன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அதில் “உ.பி.யில் தாய்மார்களுக்கும் மகள்களுக்கும் தீங்கு விளைவிக்க நினைப்பவர்களின் அழிவு உறுதி செய்யப்படுகிறது. மிகக்கடுமையான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும். இது எதிர்காலத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். உ.பி. அரசு அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளது. இது எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் வாக்குறுதி” என்று முதல்வர் யோகி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஹாத்ராஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் வாழ்ந்து வரும் பூல்கரி கிராமத்தில் ஊடகங்கள் நுழைவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததையடுத்து வெள்ளிக்கிழமை ஹாத்ராஸில் மக்களின் கோபம் அதிகமாக இருந்தது. கிராமத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

உள்ளூர்வாசிகளின் நடமாட்டம் கூட தடைசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டிற்குச் செல்வதையும் அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதையும் தடுத்ததால் ஊடகவியலாளர்கள் வயல்களில் கூட நின்று கொண்டிருந்தனர்.

இது குறித்து பேசிய ஹாத்ராஸ் கூடுதல் எஸ்.பி. பிரகாஷ் குமார், நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக, எந்த அரசியல் பிரதிநிதிகள் அல்லது தனிநபர்களும் கிராமத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

Views: - 55

0

0