தாதா ராகேஷ் பாண்டே என்கவுண்டர்..! உத்தரபிரதேச போலீஸ் அதிரடி..! ரௌடி ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்ட தீவிரம்..!

9 August 2020, 12:21 pm
rakesh_pandey_Updatenews360
Quick Share

லக்னோவில் உள்ள சரோஜினி நகர் காவல் நிலையம் அருகே நடந்த மோதலில் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்), தாதா ராகேஷ் பாண்டேவை சுட்டுக் கொன்றது.

பாஜக தலைவர் கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாண்டே, மற்றொரு முக்கிய தாதாவான முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.

“லக்னோவில் உள்ள சரோஜினி நகர் காவல் நிலையம் அருகே உத்தரபிரதேச காவல்துறையுடனான மோதலில் ராகேஷ் பாண்டே கொல்லப்பட்டார்” என்று காவல் ஆய்வாளர் அமிதாப் யஷ் கூறினார்.

உத்தரபிரதேசத்தின் மவு மாவட்டத்தில் வசிக்கும் பாண்டேதலைக்கு காவல்துறை ரூ 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைவர் கொலை மட்டுமல்லாது மேலும் பல கொடூரமான குற்றங்களிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2005’ஆம் ஆண்டு நவம்பர் 29’ஆம் தேதி 6 பேருடன் தனது சொந்த கிராமத்தில் ஒரு குடும்ப திருமணத்தில் கலந்துகொண்டிருந்தபோது முகமதாபாத் தொகுதியின் எம்.எல்.ஏ. ராய் இந்த கொடூர குண்டர்களால் கொலை செய்யப்பட்டார். ​​

முக்தார் அன்சாரி மற்றும் உள்ளூர் அரசியல்வாதியின் வீட்டில் துப்பாக்கி போன்ற கடும் ஆயுதங்களுடன் குண்டர்கள் இருப்பது குறித்து எஸ்.டி.எஃப் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ராய் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் ஏ.கே .47 ரக துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய குண்டர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். காவல்துறையினர் குற்றம் நடந்த இடத்தில் இருந்து 400’க்கும் மேற்பட்ட புல்லட் ஷெல்களை மீட்டனர் மற்றும் ராயின் உடலில் இருந்து மட்டும் 21 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை உத்தரப்பிரதேச காவல்துறையிலிருந்து மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டது. ராயின் மனைவி அல்கா ராய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, 2013’ல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை காசிப்பூரிலிருந்து டெல்லிக்கு மாற்றியது.

இந்த வழக்கில் தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி மற்றும் பிறரை விடுவிப்பதை எதிர்த்து அல்கா ராய் கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

சிபிஐ நீதிமன்றம், ஏழு நபர்களைக் கொன்ற இந்த பயங்கர வழக்கில் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறியதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ரௌடி ராஜ்ஜியத்தை முழுமையாக அழிக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதால் தொடர்ச்சியாக ரவுடிகளும் தாதாக்களும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0