உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினருக்கான முதல் தடுப்பு மையம்..! அக்டோபரில் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு..!

17 September 2020, 2:28 pm
Yogi_Adityanath_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினருக்கான முதல் தடுப்பு மையம் காசியாபாத்தில் அமைக்கப்படும் என்று ஒரு இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசியாபாத்தின் நந்த்கிராமில் உள்ள எஸ்சி / எஸ்டி மாணவர்களின் விடுதி தடுப்பு மையமாக மாற்றப்பட்டு வருகிறது.

பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம், 1987 மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946 ஆகியவற்றை மீறியதற்காக பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களையும் இந்த தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்படுவர். காசியாபாத் தடுப்பு மையம் இந்தியாவில் இதுபோன்ற 12’வது மையமாக இருக்கும்.

மீறலுக்கான தண்டனையை நிறைவு செய்த வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் காலம் வரை தடுப்பு மையங்களில் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், காசியாபாத் விடுதிகளை தடுப்பு மையமாக மாற்றும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் முடிவு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை வருத்தப்படுத்தியுள்ளது.

முன்னாள் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி தனது ஆட்சியின் போது 2010-11’க்கு இடையில் காசியாபாத்தில் கட்டப்பட்ட எஸ்சி / எஸ்டி மாணவர்களின் விடுதிகளை தடுப்புக்காவல் மையமாக மாற்றுவதை எதிர்த்தார். இந்த முடிவை வாபஸ் பெறுமாறு தற்போதைய உ.பி. அரசாங்கத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

“காசியாபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அரசாங்கத்தால் கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் எஸ்சி / எஸ்டி ஹாஸ்டலை உத்தரபிரதேசத்தின் சட்டவிரோத வெளிநாட்டினருக்கான முதல் தடுப்பு மையமாக மாற்றுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது மற்றும் கண்டிக்கத்தக்கது. இது அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு சான்று. இந்த உத்தரவை வாபஸ் பெறுமாறு பகுஜன் சமாஜ் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.” என்று மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.

 டெல்லி-மீரட் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தடுப்பு மையம் அக்டோபருக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தற்போது, ​​இந்தியா முழுவதும் இதே போன்ற 11 தடுப்பு மையங்கள் உள்ளன. அசாமில் மட்டும், இதுபோன்ற ஆறு மையங்கள் உள்ளன. டெல்லி, கோவாவின் மாபூசா, ராஜஸ்தானின் ஆல்வார், பஞ்சாபின் அமிர்தசரஸ், கர்நாடகாவின் சோண்டேகோப்பா ஆகிய இடங்களில் தடுப்புக்காவல் மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் தடுப்பு மையம் என்ற பெயரில் எதுவும் இல்லையென்றாலும் சட்டவிரோத வெளிநாட்டினரை தடுத்து வைக்க இன்டெர்மீடியேட் கேம்ப் எனும் பெயரில் திருச்சி பெண்கள் சிறையின் ஒரு பகுதியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Views: - 0

0

0