மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு: தலைவர்கள் இரங்கல்….!!!

Author: Aarthi
9 October 2020, 9:56 am
ramvilash baswan - updatenews360
Quick Share

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது சோகத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றும் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய அரசியல் மற்றும் மத்திய அமைச்சரவை ராம்விலாஸ் பாஸ்வானை எப்போதும் நினைவுகூறும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்புடையவர் பாஸ்வான் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் வலுவான அரசியல் குரலை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சமூக நீதியின் உறுதிமிக்க தூண் சாய்ந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் சார்பாக நாடாளுமன்றத்தில் ஓலித்துக்கொண்டு இருந்த உரிமைக் குரல் ஓய்ந்து விட்டது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 49

0

0