இவர் தான் வேலு… கேரளாவின் சூப்பர் ஸ்டார் எருமை!

26 January 2021, 10:15 am
Quick Share

வேலு என்ற எருமை ஒன்று, கேரளாவின் சூப்பர் ஸ்டார் எருமையாக உயர்ந்துள்ளது. தினமும் முட்டைகளை சாப்பிடும் இந்த எருமையின் எடை 1,300 கிலோ.. இதற்காக ஒரு பெரிய ரசிகர் மன்றமே அங்கு உள்ளதாம்..

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஒட்டுக்குழி என்ற பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர், பாசமுடன் எருமை ஒன்றை வளர்த்து வருகிறார். வேலு என்ற பெயர் கொண்ட அந்த எருமைக்கு சில நாட்களுக்கு முன்பு தான் 6 வயது நிறைவடைந்திருக்கிறது. அதன் பிறந்த நாளின் போது, பெரிய அளவில் கேக் வெட்டி, அதற்கு ஊட்டப்பட்டது. இதற்காக அதன் ரசிகர்கள் பலரும் குவிந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கேரளாவில் ரசிகர் மன்றம் கொண்ட ஒரே எருமை மாடு நம் வேலு தான். 1,300 கிலோ எடை கொண்ட வேலு, 5.25 அடி உயரமும், 8.5 அடி நீளம் வளர்ந்துள்ளது. வேலுவை அதன் உரிமையாளரான அன்வர், 9 மாத குட்டியாக இருக்கும்போது வாங்கியிருக்கிறார். தற்போது, வேலுவுக்காக தினமும் 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறாராம் அன்வர். மற்ற எருமைகள் போல், வேலு புல் சாப்பிடாதாம். பழங்கள், காய்கறிகள் மற்றும் முட்டைகள் மட்டும் தான் இது உணவாக எடுத்துக் கொள்கிறது.

தினமும் 10 முட்டைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்களை சாப்பிடுகிறதாம்.. அதற்கு மிகவும் பிடித்த உணவு ஒரு பழம் தான். அது பலா பழமாம்!! 3 ஆண்டுகளுக்கு முன்பே, வேலுவை ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு கேட்க, அதனை விற்க அன்வர் மறுத்திருக்கிறார். இப்போது காசர்கோடை சேர்ந்த பணக்காரர் ஒருவர் 40 லட்சம் ரூபாய்க்கு வேலுவை விற்கும்படி வற்புறுத்த, தனது கிராமத்தின் சூப்பர் ஸ்டாரை விற்க அன்வர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காணப்படும் முர்ரா வரை எருமை இனத்தை சேர்ந்தது வேலு. அதன் அடர் கருப்பு வண்ணமே அதனை ஸ்பெஷல் ஆக்கி உள்ளது. வேலுவின் ரசிகர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும், அதன் பிறந்தநாளை வெகு விமரிசையாக, கேக் வெட்டி கொண்டாடுவார்களாம்.. அரசியல்வாதிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.. கோவில் விழாக்களுக்கு அழைத்து செல்வதால், அதன் புகழ் மேலும் பரவ துவங்கியிருக்கிறது. குழந்தைகள் அதன் மேல் ஏறி அமர்ந்து போட்டோ எடுக்க போட்டி போடுகின்றனராம். எருமைக்கு வந்த வாழ்வை பாருடா என்கிறீர்களா?

Views: - 1

0

0