21 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 2:19 pm
Bilkis
Quick Share

21 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகளும் நன்னடத்தை மற்றும் தண்டனை குறைப்பு விதிப்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் அரசு பரிந்துரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அடங்கிய மருவு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் கூறியதாவது, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம்.

பெண்களின் மரியாதை மிகவும் முக்கியம், பெண்கள் மரியாதைக்குரியவர்கள். உண்மையை மறைத்து முன்விடுதலைக்கோரி குஜராத் அரசிடம் குற்றவாளிகள் முறையிட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்கு செல்கின்றனர். எனவே, உச்சநீதிமன்றம் தீர்ப்பால் குஜராத் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Views: - 303

0

0