பூனை போல மனிதர்களுடன் விளையாடி மகிழ்ந்த சிறுத்தை! வைரல் வீடியோ

16 January 2021, 8:06 am
Quick Share

சாலையின் ஓரத்தில் நிற்கும் மக்களுடன், சிறுத்தை ஒன்று விளையாடி மகிழ்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு என விலங்கு நல ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த இரு நாட்களாக இணையத்தில் வலம் வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது சிறுத்தை ஒன்று, மக்களிடம் பூனை போல் விளையாடி மகிழ்ந்தது. இமாச்சல பிரதேசத்தின் தீரத்தன் பள்ளத்தாக்கில், இந்த வீடியோ படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், சாலையில் காரை நிறுத்தி, சாலை ஓரம் மனிதர்கள் நின்று கொண்டிருக்க, சிறுத்தை ஒன்று அங்கு சுற்றிக்கொண்டிருக்கிறது. சிறுத்தை அவர்கள் அருகில் செல்லும் போது, அனைவரும் பயந்து போய் பின்வாங்குகின்றனர். ஆனால் அதிலும் ஒருவர், பயப்படாமல் அருகில் நின்று கொண்டு வீடியோ எடுக்கிறார். அவரை கடந்து செல்லும் அந்த சிறுத்தை, பின்வாங்கியவர்களில் ஒருவரின் மேல், வீட்டு விலங்கு போல் ஏறி விளையாடுகிறது. வயிற்றில் புளியை கரைக்கும் இந்த வீடியோவை, ஐஎப்எஸ் அதிகாரியான பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோவுடன் ‘‘இந்த சிறுத்தையின் நடத்தையை புரிந்து கொள்ள முடியவில்லை. விசித்திரமாக நடந்துகொள்கிறது’’ என பதிவேற்றம் செய்ய அது நெட்டிசன்களை கவர்ந்ததுடன், வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது விலங்குகள் நல ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்த சிறுத்தையை வனத்துறைக்கு தெரியாமல், யாரேனும் வீட்டில் வளர்த்திருக்கலாம் என உறுதியாக கூறுகின்றனார் பர்வீன்.

வீட்டில் வளர்ந்த சிறுத்தையால் மட்டுமே மனிதர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்று கவலை தெரிவித்துள்ள அவர், இது மிகவும் தவறு எனவும் கண்டித்துள்ளார். ஆனால் வீடியோ வைரலாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

Views: - 0

0

0