மேற்குவங்க சட்டசபை தேர்தல்: 5ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு..!!

17 April 2021, 9:21 am
wb election - updatenews360
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் கட்ட தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5ம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். இதில், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. நடந்து முடிந்த 4ம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதனால், 5ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அங்கு 5ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் அனைத்தும் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை எனவும், வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 6ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22ம் தேதியும், 7ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதியும், கடைசியாக 8ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 45 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவதால் பாதுக்காப்பு காரணங்களுக்காக தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 25

0

0