“என்னை சுட்டுடாதீங்கய்யா”..! கழுத்தில் பதாகையுடன் போலீசிடம் சரணடைந்த உ.பி. தாதா..!
28 September 2020, 10:47 amஉத்தரபிரதேசத்தின் சம்பலில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு ரூ 15,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் கழுத்தில் “என்னை சுட்டுவிடாதீர்கள்” எனும் பதாகையுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்துடன் போலீசில் சரணடைந்தார்.
நயீம் என்ற அந்த குற்றவாளி, சம்பல் பகுதியில் பல கொடூர சம்பவங்களை செய்து மிகப்பெரிய தாதாவாக வலம் வந்தவர். ஆனால் சமீபகாலமாக யோகி தலைமையிலான உத்தரபிரதேச அரசின் உத்தரவின் பேரில் தாதாக்களை போலீசார் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர்.
இதனால் தாதாக்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைமறைவாகி வருகின்றனர். இந்நிலையில் நயீம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நேற்று மதியம் சம்பலில் உள்ள நகாசா காவல் நிலையத்திற்கு வந்தார்.
“நான் தவறான செயல்களைச் செய்திருக்கிறேன். சம்பல் காவல்துறைக்கு நான் பயப்படுகிறேன். என் தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். நான் சரணடைகிறேன். தயவுசெய்து என்னை சுட வேண்டாம்” என்று கழுத்தில் தொங்கவிடப்பட்ட ஒரு பதாகையுடன் அவர் காவல்நிலையம் சென்று கைதாகியுள்ளார்.
குண்டர்கள் சட்டத்தின் கீழ் நயீம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்நிலைய அதிகாரி தர்பால் சிங் தெரிவித்தார்.
சம்பல் காவல்துறையினர் ஒரு ட்வீட்டில், கேங்க்ஸ்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி 27.09.2020 அன்று நகாசா காவல் நிலையத்தில் தானாக வந்து சரணடைந்தார் எனத் தெரிவித்துள்ளது.