இது ரஜினி ஸ்டைல் தோசை! மும்பையை கலக்கும் தமிழர்

26 February 2021, 10:33 am
Quick Share

சமூக வலைதளங்களில் ‘பறக்கும் தோசை’ புகழ்பெற்றிருந்த நிலையில், தற்போது ரஜினி தோசை பிரபலமாகி உள்ளது. ரஜினி ரசிகர் ஒருவர், மும்பையில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி தோசை’ என பெயரில் சுடும் தோசை தான் இப்போது மும்பை முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் முழுவதும் பறக்கும் தோசை குறித்த தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு போட்டியாக வந்திருக்கிறார் முத்து அண்ணா. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாத்ரா பகுதியில் உள்ளது முத்து தோசை கார்னர். மாஸ்டர் முத்துவின் வேகமும், விறுவிறுப்பும் அவருக்கு ரசிகர்கள் பலரை பெற்று தந்திருக்கிறது.

சாலையோரம் அமைந்திருக்கும் அவரது கடையில், வேகவேகமாக தோசை சுட்டு, அதனை ஸ்டைலாக தட்டில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு லாவகமாக தருகிறார். அதனை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், நீங்கள் ரஜினிகாந்தின் ரசிகரா என ஹிந்தியில் கேள்வி எழுப்ப, நான் ரஜினியின் பெரிய ரசிகர் என்கிறார் மாஸ்டர் முத்து.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோசை, குறித்தும் முத்து குறித்தும் தான், தற்போது மும்பைவாசிகள் பேசி வருகின்றனர். விஷயம் தெரிந்தவர்கள் அவர் கடைக்கு படையெடுத்தும் வருகின்றனர். முத்து தோசை சுடும் வீடியோவை, நவீத் ஐஆர்எஸ் என்பவர் தனது பேஸ்புக்கில் பகிர, அது வைரலாகி உள்ளது. இதுவரை இந்த வீடியோவை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். என்ன நாமும் ஒரு ரஜினி தோசையை ஆர்டர் குடுப்போமா.. ஆனா அதுக்கு நாம மும்பை போகனும் பாஸ்…

Views: - 6

0

0