மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா..! மம்தா பானர்ஜியின் கனவை சுக்கு நூறாக உடைத்த சுவேந்து அதிகாரி..?

27 November 2020, 3:00 pm
Suvendhu_TMC_UpdateNews360
Quick Share

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரசுக்கு (டி.எம்.சி) ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாக, கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இன்று மம்தா பானர்ஜி அரசாங்கத்திலிருந்து போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சுவேந்து அதிகாரி தனது ராஜினாமா கடிதத்தை தொலைநகல் மூலம் முதல்வருக்கு அனுப்பினார். பின்னர் அவர் கவர்னர் ஜகதீப் தங்கருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

“நான் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதை இதன்மூலம் அறிவிக்கிறேன். அதை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேற்கு வங்காளத்தின் மேதகு ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் இதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று சுவேந்து அதிகாரி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.

“மாநில மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. நான் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் பணி செய்தேன்” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த சில வாரங்களாக ஆளும் திரிணாமுல் கட்சியின் தலைமையை கேள்வி எழுப்பி வரும் சுவேந்து அதிகாரி, நேற்று ஹூக்லி நதி பாலம் ஆணையர்களின் தலைவர். எனும் ஒரு முக்கிய பதவியிலிருந்து விலகினார். பின்னர் டி.எம்.சி பாராளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜியை அந்த பதவிக்கு மம்தா பானர்ஜி அரசு நியமித்தது.

“இன்று பிற்பகல் 1:05 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மூலம் சுவேந்து அதிகாரி ராஜினாமா கடிதம் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை அரசியலமைப்பு கண்ணோட்டத்தில் தீர்க்கப்படும்” என்று கவர்னர் ட்வீட் செய்துள்ளார்.

சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரசிலிருந்து பிரிந்து செல்வதற்கான சாத்தியக்கூறுகள் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. ஆளும் டி.எம்.சி அதிகாரியுடன் பேக் சேனல் பேச்சுவார்த்தைகளைத் திறந்து, அவரை கட்சியில் தக்க வைத்துக் கொள்ள அவரது குறைகளைத் தீர்க்க முயற்சிக்கிறது.

அவருடன் பேசுவதற்காக கட்சியின் மூத்த எம்.பி சுதீப் பந்தோபாத்யாயுடன் மூத்த டி.எம்.சி தலைவர் சௌகதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைத் தவிர அதிகாரி, மேற்கு மிட்னாபூர், பாங்குரா, புருலியா மற்றும் ஜார்கிராம் மாவட்டங்களின் 35-40 சட்டமன்றத் தொகுதிகளில் நேரடி ஆதிக்கம் செலுத்துகிறார். அவை பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஜங்கல்மஹால் பகுதி மற்றும் பிர்பூம் மாவட்டத்தின் சில பகுதிகளில் வருகின்றன.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சுவேந்து அதிகாரி வெளியேறினால், மம்தா பானர்ஜியின் முதல்வர் கனவு கானல் நீராகி விடும் என்பதால், அவரை தக்கவைத்துக் கொள்ள அதி தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0