தகவல் தொழில்நுட்ப மையமாக ஹைதராபாத்..! மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா சூளுரை..!
29 November 2020, 3:43 pmஇந்த முறை பாஜக தனது இடங்களை அதிகரிக்கவோ அல்லது தனது இருப்பை வலுப்படுத்தவோ போராடவில்லை என்றும் அதேஹ் சமயத்தில் இந்த முறை ஹைதராபாத் மேயர் பாஜகவைச் சேர்ந்தவராக இருப்பார் எனவும் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.
ஐதராபாத் ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக மாறும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர் மேலும், மாநில மற்றும் மத்திய அரசால் நிதி வழங்கப்பட்டாலும் மாநகராட்சி அமைப்பால் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் காங்கிரஸின் கீழ் உள்ள தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் இதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என அமித் ஷா கூறினார்.
முன்னதாக கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜி.எச்.எம்.சி) தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக அமித் ஷா இன்று ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தார்.
உள்துறை அமைச்சர் இன்று தெலுங்கானாவில் பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றினார். மேலும் செகந்திராபாத்தில் ஒரு ரோட்ஷோவில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் என ஒரு பெரும்படையே, ஒரு மாநகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிசம்பர் 1’ம் தேதி ஜிஎச்ச்எம்சி தேர்தலில் 150 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 4’ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த ஜி.எச்.எம்.சி தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 99 வார்டுகளில் வெற்றி பெற்றது. ஏஐஎம்ஐஎம் 44 இடங்களைப் பிடித்தது. பாஜக வெறும் நான்கு வார்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் 2023 மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெரும் நோக்கில் களப்பணி செய்து வரும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த மாநகராட்சி தேர்தல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
0
0