உச்சநீதிமன்ற ஆலோசனை நிராகரிப்பு..! ஜனவரி 26’இல் பேரணி உறுதி..! விவசாய அமைப்புகள் அதிரடி முடிவு..!

12 January 2021, 6:59 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சிறப்புக் குழுவில் விவாதிக்கும் உச்சநீதிமன்றத்தின் முன்மொழிவை விவசாய அமைப்புகள் நிராகரித்தன.

இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், வேளாண் சட்டங்களை அடுத்த உத்தரவு வரும் வரை அமல்படுத்துவதற்கு தடை விதித்ததுடன், இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை வேளாண் சங்க தலைவர்கள் வரவேற்றனர். இருப்பினும் அவர்கள் குழு முன் ஆஜராக மறுத்துவிட்டனர்.

“நாங்கள் நேற்றிரவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டோம். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவையும் மத்தியஸ்தத்திற்காக நாங்கள் ஏற்க மாட்டோம். அவர்களின் தோள்களில் இருந்து சுமையை எடுக்க உச்சநீதிமன்றம் மூலம் ஒரு குழுவை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால் சிங்கு எல்லையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

இதற்கிடையே, “இதுபோன்ற எந்தவொரு குழுவின் முன்பும் நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று நேற்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் போராட்டம் வழக்கம் போல் தொடரும். உச்சநீதிமன்றம் நியமித்துள்ள இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் அரசாங்கத்தின் சட்டங்களை நியாயப்படுத்தி வருகின்றனர்” என்று பல்பீர் சிங் ராஜேவால் எனும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஒருவர் கூறினார்.

ஜனவரி 26’ம் தேதி திட்டமிடப்பட்ட டிராக்டர் பேரணி மற்றும் எதிர்ப்பு அணிவகுப்பு தொடரும் என்று ராஜ்வால் கூறினார். எனினும், விவசாயிகள் செங்கோட்டை அல்லது பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தினத்தில் சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்திகளை அவர் நிராகரித்தார்.

“ஜனவரி 26 அன்று அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும். எங்கள் திட்டத்தை ஜனவரி 15 அன்று அறிவிப்போம்” என்று அவர் கூறினார்.

காசிப்பூர் எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், “எங்கள் எதிர்ப்பு தொடரும். அரசாங்கம் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் எங்கள் உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.” என்றும் கூறினார்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வரும் விவசாய சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் போராட்டம் முடிவுக்கு வராததால், தற்போது உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0