ஆட்டிப்படைக்கும் பாலிவுட் மாபியா.! அசராமல் எதிர்த்து நிற்கும் கங்கனா ரனவத்..!
9 September 2020, 5:28 pmசுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பாலிவுட் மாபியா குறித்து கருத்து கூற ஆரம்பித்தது முதல், மகாராஷ்டிரா அரசிடமிருந்து தொடர் எதிர்ப்புகளை மறைமுகமாக பெற்று வந்த கங்கனா ரனவத் தற்போது, மும்பை மாநகராட்சி தன்னுடைய அலுவலகத்தை இடித்ததன் மூலம் நேரடியாகவே எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். ஆனால் இந்த எதிர்ப்புகள் எதுவும் அவரை அமைதியாக்காமல் மணிகர்ணிகாவைப் போல் வீறுகொண்டு எழச்செய்துள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவம் வெளியானதும், அதை தற்கொலை என்ற கோணத்திலேயே முடித்து வைக்க மும்பை காவல்துறை தீவிரமாக முயன்றது. வழக்கமாக ஆடு மாடுகள் துன்புறுத்தப்பட்டாலே உச் கொட்டும் பாலிவுட் பிரபலங்கள் யாரும், தனது துறையைச் சேர்ந்த ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம் இறந்தது குறித்து கனத்த மௌனம் கடைப்பிடித்தது.
ஆனால் சுஷாந்தின் தந்தை உள்ளிட்ட சிலரின் முயற்சிகளால் இது வெறும் தற்கொலை மட்டுமே அல்ல எனும் குரல்கள் எழ ஆரம்பித்தது. உடனே பாலிவுட் மாபியாவின் பின்னணியில் உள்ளவர்களாக கருதப்படும் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் இது தற்கொலை தான் என நிலைநிறுத்த வெளிப்படையாக குரல் கொடுத்தார்கள்.
இதையடுத்து தான், பாலிவுட் மாபியாவை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த மற்ற முற்போக்கான கலைஞர்களும் வெளியே வந்து குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதில் தொடர்ந்து தன்னுடைய கருதட்டுக்களை முன்வைத்து முன்னணியில் நின்றவர் கங்கனா ரனவத். இதனால் அப்போதே கங்கனா ரனவத்தை பாலிவுட் திரை உலகில் கட்டம் கட்டும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
தான் கட்டம் கட்டப்படுவதை உணர்ந்த கங்கனா ரனவத் வெகுண்டெழுந்து மும்பை தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் போல் உள்ளது என காரசாரமாக பேசினார். சமயத்திற்காக காத்திருந்த மும்பையை ஆட்டி வைக்கும் சக்திகள் கங்கனா தன்னை வளர்த்த மராட்டியத்திற்கு எதிராக பேசுவதாக பற்ற வைத்தனர்.
உச்சகட்டமாக சிவ சேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத், கங்கானாவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். பிரிட்டன் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரரின் வம்சாவளியில் வந்த கங்கனா ரனவத் இதையெல்லாம் பார்த்து பணிவாரா என்ன?
“நான் நேரடியாக மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் மோதிப் பாருங்கள்” எனும் தொனியில் சிவசேனா ஆட்களுக்கு பதிலடி கொடுத்து தான் வந்து இறங்கும் நேரத்தையும் குறிப்பிட்டார். இதையடுத்து கங்கனா ரனவத்துக்கு அச்சறுத்தல் இருப்பதாக ஹரியானா அரசு அளித்த ஆலோசனையின் பேரில் அவருக்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு கொடுத்தது.
மத்திய அரசு நேரடியாக கங்கானாவுக்கு ஆதரவாக களமிறங்கியதால், மகாராஷ்டிரா ஆளும் வர்க்கம் கலங்கிப் போனது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் இதை ஆச்சர்யமாகவும் சோகமாகவும் பார்ப்பதாகக் கூறினார்.
சிவசேனாவின் சஞ்சய் ராவத் எம்பி ஒரு படி இறங்கி வந்து கங்கனா ரனவத்திடம் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கக் கூட தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆனாலும் பாலிவுட் மாபியாவும் மகாராஷ்டிரா ஆளும் வர்க்கமும் ஏதாவது செய்து தனது பராக்கிரமத்தை நிலைநிறுத்த முடிவு செய்து, சிவசேனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சி மூலம் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.
மும்பையில் அமைந்துள்ள கங்கனா ரனவத் அலுவலகத்தில் அடாவடியாக நுழைந்து ஆய்வு செய்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் உடனடியாக இடித்து தரைமட்டமாக்கியது.
இதை ஜனநாயகத்தின் இறப்பு என வர்ணித்துள்ள கங்கனா ரனவத், தன்னை வீழ்த்தி விடலாம் என மும்பை மாபியாக்கள் கணக்கு போட்டாலும், தான் மீண்டும் எழுவேன் என்றும், அப்படி எழும்போது மாபியாக்கள் இன்னும் அதிகமாக கதறுவார்கள் எனவும் உறுதியுடன் கூறியதோடு, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு தனது கட்டிடங்களை இடிக்க மும்பை உயர்நீதிமன்றத்தில் தடையும் வாங்கியுள்ளார்.
ஜனநாயகம், கருத்துரிமை, பேச்சுரிமை என வழக்கமாக கூறிக்கொண்டு சுற்றும் எவரும் ஏனோ கங்கனாவின் கருத்துரிமைக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லை.
மாபியாக்கள் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை போன்ற பகுதிகளில் உண்மையை வெளிக்கொண்டு வர நினைக்கும் எவராக இருந்தாலும், அவர்கள் பிரபலங்களாகவே இருந்தாலும் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பதை கங்கனா ரனவத் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் மூலமே உணரலாம்.
அனைத்து தடைகளையும் மீறி, கங்கனா ரனவத் வெற்றிக்கொடி நாட்டுவாரா..? நாட்டவேண்டும் என்பதே ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் எண்ணமாகவும் உள்ளது.
0
0