என்னது செப்டம்பர் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கா..? மத்திய அரசு சொல்வது என்ன..?

15 September 2020, 9:50 am
Lockdown_Tamilnadu
Quick Share

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், செப்டம்பர் 25 முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக பரவி வரும் அறிக்கைகளை, மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) மறுத்துள்ளது. 

சமூக ஊடகங்களில் வெளியான அறிக்கைகளில், “செப்டம்பர் 25 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அக்டோபர் 1 முதல் சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் திட்ட ஆணையம் இதை கண்டிப்பாக செயல்படுத்த பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் 46 நாட்கள் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதை போலி என்று கூறிய பிஐபி மேலும், “உரிமைகோரல்: செப்டம்பர் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியது போலியானது. ஊரடங்கை மீண்டும் விதிக்க அத்தகைய உத்தரவு எதுவும் விதிக்கப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளது

இணையத்தில் கடல் போல் பரவும் போலி செய்திகளுக்கு மத்தியில், மற்றொரு ஊடக அறிக்கை சினிமா அரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து பலவிதமான செய்திகளைக் கூறியது.

போலி செய்திகளை குறிப்பிட்டு, பிஐபி, “உரிமைகோரல்: கடுமையான விதிமுறைகளை விதித்து அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதாக ஊடக அறிக்கை கூறியுள்ளது. இந்த தகவல் போலி. சினிமா அரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் விஷமிகளால் பரப்பப்படும் போலிச் செய்திகள் மக்களிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியம், போலிச் செய்திகள் குறித்த உண்மைகளை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0