கேரளாவில் ஜிகா வைரசுக்கு 30 பேர் பாதிப்பு

17 July 2021, 11:03 pm
Quick Share

கேரளாவில் இதுவரை 30 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது.

கேரளாவில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் குறைந்த நிலையில் கேரளாவில் இன்னும் பாதிப்பு தீவிரமாக உள்ளது.இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது ஜிகா வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. அதனால் மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஜிகா வைரஸ் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இதில் மேலும் பலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி தொற்று நோய் பரிசோதனை கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடை சேர்ந்தவர் ஆவார். இன்னொருவர் அனயரா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.இவர்கள் இருவரும் 3 கிலோ மீட்டர் பகுதிக்குள் வசிப்பவர்கள். இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் நேற்று பாதிக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்து இதுவரை 30 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குமரி-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் சோதனைச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் ஜிகா வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வடிக்கும் சிரட்டைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 68

0

0