அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி…திமுகவில் மகளிருக்கு மரியாதை இல்லை என குற்றச்சாட்டு…கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
4 February 2022, 8:34 am
Quick Share

கோவை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் தர மறுப்பதாக கூறி திமுக பெண் நிர்வாகி ஒருவர் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுக மகளிர் அணியினர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா அருகே வீடு ஒன்றை வாங்கி இங்கேயே முகாமிட்டுள்ளார். இதனிடையே திமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது . இதில் திமுக நிர்வாகிகளின் மனைவி, மகள் என சொந்தங்களுக்கே சீட் ஒதுக்கியதாக திமுக பெண் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே பெண் நிர்வாகி ஒருவர் மண்ணெண்ணை கேனுடன் கொடிசியா அருகே உள்ள அமைச்சர் வீட்டின் முன்பு சென்றார். தனக்கு சீட் கிடைக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அமைச்சர் அந்த வீட்டில் இல்லை. இந்த சூழலில், அங்கு வந்த போலீசார் பெண் நிர்வாகியிடம் மண்ணெண்ணை கேனை பிடுங்கி வீசினர்.

இந்த சூழலில், தீர்வு கிடைக்காவிட்டால் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறி அந்த பெண் அமைச்சர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவையில் திமுகவில் மகளிருக்கு மரியாதை இல்லை எனக்கூறி கொடிசியா அருகே உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுகவில் 50 சதவிகித இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மகளிர் அணியில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தை கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லவே அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த மகளிருக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாத நிலையிலும் வீட்டின் முன்பாக கூடிய மகளிர் அணியினர் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Views: - 694

0

0