தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்தில் மூடனும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Author: Rajesh
4 February 2022, 9:57 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதேசமயம், தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுடன் பார்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் சரக்கு வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவது போலவே, டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

வெளியில் ரூ.10க்கு விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் பார்களில் ரூ.50க்கு விற்கப்படுகிறது. இந்த பார்களை நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனிடையே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி எனவும், பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 973

0

1