செஸ் ஒலிம்பியாட் ; இந்திய அணிகளுக்கு இரு வெண்கலம் : தனிநபர் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம்..!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 5:07 pm

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளன.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் 44வது சீசன் நடந்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 11 சுற்றுகளாக ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில் 6 அணிகள் கலந்து கொண்டன.

இன்று நடந்த இறுதிச்சுற்றில் ஓபன் பிரிவில், பிரக்ஞானந்தா, குகேஷ், சரின் நிஹால், ரோனக் சத்வானி ஆகியோர் இடம்பெற்றிருந்த இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இருப்பினும், அனைத்து சுற்றுகளின் முடிவில் 18 புள்ளிகளை பெற்று இந்திய ‘பி’ அணி வெண்கலம் வென்றது. இதில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கத்தையும், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

இதேபோல, பெண்கள் ஏ பிரிவில் 17 புள்ளிகளை பெற்ற இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்தப் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியது. தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

அதேபோல், நிகள் சரினும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், எரிகேசி அர்ஜூன் வெள்ளிப் பதக்கத்தையும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க இருக்கிறார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?