விவசாயிகள் மட்டுமல்ல நெசவாளர்களின் வயிற்றிலும் திமுக அடித்து விட்டது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 5:57 pm
Quick Share

மதுரை : அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. என தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த சுவாமி சதாசிவானந்தாவின் யதி பூஜை விழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது :- நெசவாளர்கள் வாழ்வில் வளர்ச்சிக்கு பேரறிஞர் அண்ணா கைத்தறி ஆடைகளை சுமந்து விற்பனை செய்தார். நெசவாளர்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1983ஆம் ஆண்டு வேட்டி, சேலை திட்டத்தை தொடங்கினார்.

தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2021ம் ஆண்டில் கூட பொங்கல் பரிசு உடன் சேர்ந்து 490 கோடியில் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டது. இது வருவாய் துறை மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஏனென்றால் நானும் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றினேன்.  இதன் மூலம் 14,000 கைத்தறி நெசவாளர்கள், 54,000 விசைத்தறி நெசவாளர்கள் பயன்பட்டனர்.

அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன திட்டம் என்று அம்மா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் மூடுவிழா நடத்தப்பட்டு விட்டன . தற்பொழுது அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி, மக்களை தேடி மருத்துவம் என்று கூறினார்கள்.

ஆனால், ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களை பெயர் பதிவு செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக எதுவும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளது. தற்போது மின் பற்றாக்குறை மட்டுமல்லாதது, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக ரீதியில் உள்ள 75 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, என்றார்.

Views: - 511

0

0