தனியொரு ஆளாக ஆப்கனை துவம்சம் செய்த துபே… முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

Author: Babu Lakshmanan
12 January 2024, 9:09 am
Quick Share

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடந்தது.

சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, டி20 போட்டியில் மீண்டும் களம் கண்டார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக, நபி 42 ரன்களும், அஷ்மதுல்லா 29 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டும், ஷிவம் துபே 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா ரன் எதுவுமின்றி ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கில் (23), திலக் வர்மா (26), ஜிதேஷ் ஷர்மா (31) என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய துபே, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இதன்மூலம், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய மண்ணில் 160 ரன்னுக்கும் குறைவான இலக்குடன் 17 போட்டிகளில் விளையாடி இந்திய அணி, 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 644

0

0