தவான், ஸ்ரேயாஷ் நிதான ஆட்டம்.. கடைசி நேரத்தில் SKY- யின் ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் ; கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா..!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 11:29 am

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் தவான் மற்றும் கில் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கில் 50 ரன்னுடனும், தவான் 72 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஷ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

பின்னர், ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர், சஞ்சு சாம்சன் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. ஒரு கட்டத்தில் சாம்சன் 36 ரன்னுக்கு கேட்ச் ஆகி அவுட்டானார்.

கடைசி 4 ஓவர் இருக்கையில் களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடினார். நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சவுதி, மில்னே ஓவர்களில் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டார். ஸ்ரேயாஷ் ஐயரும் தனது தரப்பில் அதிரடி காட்ட முயன்ற போது, 80 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புற்கு 306 ரன்கள் சேர்த்தது. 16 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ஃபெர்குஷன், சவுதி தலா 3 விக்கெட்டுக்களையும், மில்னே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!