1992ல் நடந்த அதிசயம் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் நடக்குமா? இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 1:09 pm
T20 Final - Updatenews360
Quick Share

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டு உலக கோப்பையை உச்சி முகர்ந்த இங்கிலாந்து அணி 3-வது முறையாக இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிலையில், கோப்பைக்கான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள்.

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும்.

முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது. அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான போட்டி. வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் கிடைத்தன. இது இங்கிலாந்துக்கு ஏமாற்றமாகவும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் போனது.

அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மற்றொரு தோல்வியைச் சந்தித்து. டெண்டுல்கர், அசாருதீன் ஆகியோரின் கணிசமான ரன் குவிப்பால் இந்திய அணி 216 ரன்களை எடுத்தது. ஆனால் 173 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது பாகிஸ்தான்.

முதல் 5 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை மட்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடிந்தது. அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது.

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூசிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூசிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய வாசிம் அக்ரம், கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

Views: - 293

0

0