2 அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏக்கள்…கட்சி பேதங்களை கடந்து களைக்கட்டும் ‘ஈஷா கிராமோத்சவம்’!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2023, 10:49 am
Isha Gramotshav - Updatenews360
Quick Share

கிராமப்புற மக்களின் நலனுக்காக ஈஷா நடத்தும் ‘ஈஷா கிராமோத்வம்’ விளையாட்டு திருவிழாவில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி செப்.23-ம் தேதி வரை 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆக. 12,13 ஆகிய தேதிகளில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக, சுமார் 70 இடங்களில் கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர்களும் பங்கேற்று தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி, போட்டிகள் நடந்த இடங்களில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தனர்.

குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்த போட்டியை திமுகவை சேர்ந்த அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். இதேபோல், புதுச்சேரியில் நடந்த போட்டிகளை பாஜக அமைச்சர் திரு.சரவணக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும், திருத்தணியில் திரு. சந்திரன், கும்மிடிப்பூண்டியில் திரு. கோவிந்தராஜன், பெரம்பலூரில் திரு.பிரபாகரன், சாத்தூரில் திரு.ரகுராமன், பரமகுடியில் திரு. முருகேஷன் என 5 திமுக எம்.எல்.ஏக்கள், சிதம்பரத்தில் திரு.கே.ஏ.பாண்டியன், தர்மபுரியில் திரு.கே.பி.அன்பழகன், பவானி சாகரில் திரு.பண்ணாரி என 3 அதிமுக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு.ராஜேஸ் குமார் கிள்ளியூரிலும், பாஜக எம்.எல்.ஏ திருமதி.சரஸ்வதி ஈரோட்டிலும் நடந்த நிகழ்ச்சிகளும் பங்கேற்று விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

இதுதவிர, ஓசூர் மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா (திமுக), நாகர்கோவில் துணை மேயர் திருமதி. மேரி பிரின்சி லதா (திமுக), காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் என பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தக்கட்டமாக, கபடி போட்டிகள் இம்மாத இறுதியிலும், டிவிஸினல் மற்றும் பைனல் போட்டிகள் அடுத்த மாதமும் நடைபெற உள்ளது.

Views: - 284

0

0