கோவையில் அதிகரிக்கும் கஞ்சா சப்ளை?….கல்லூரி மாணவர்கள் தான் டார்க்கெட்: 18 கிலோ கஞ்சா பறிமுதல்…3 பேர் கைது!!

Author: Rajesh
23 January 2022, 10:33 am
Quick Share

கோவை: உக்கடம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் காரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, கோவை போலீசார் கூறியதாவது, கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். மாணவர்கள் பலர் தனியாக அறை எடுத்தும் தங்கி இருக்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு கஞ்சா விற்பனை செய்ய, தேனி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு கடத்தி வந்துவிற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில் கோவை உக்கடம், வின்சென்ட்ரோடு, திருச்சி, சுங்கம் சாலை சந்திப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வீரமுத்து, ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பைக்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுகுணாபுரத்தை சேர்ந்த அப்துல் சமது(29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார்(32), அருண்குமார்(21) என்பதும், கம்பத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து மாணவர்கள் உள்பட பலருக்கு விற்க திட்டமிட்டதாகவும் தெரியவந்தது. தொடர்ந்து கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Views: - 1515

0

0