சிலைகளை விற்க முயற்சி : பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது…

Author: kavin kumar
2 February 2022, 10:29 pm
Quick Share

ராமநாதபுரம் : நடராஜர் சிலை உள்பட 7 சுவாமி சிலைகளை விற்க முயன்ற வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் சட்டவிரோடமாக சிலைகளை கடத்தி விற்பனை செய்வதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து பாஜக நிர்வாகி அலெக்ஸாண்டரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அருப்புக்கோட்டையை சேர்ந்த காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து தன்னிடம் சிலையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீதமுள்ள 3 பேரையும் அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தங்களிடம் 7 சிலைகள் இருப்பதாகவும், அந்த சிலைகளை 4 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒரு மலையடிவார கிராமத்தில் இருந்து எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சிலையை வைத்திருந்தவர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி, அந்த 7 சிலைகளையும் கடத்தி வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட தொன்மைவாய்ந்த 2 நடராஜர் சிலைகள், 1 நாக கன்னி சிலை, 1 காளி சிலை, 1 முருகன் சிலை, 1 விநாயகர் சிலை,1 நாக தேவதை சிலை ஆகிய 7 உலோக சுவாமி சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சிலைகளின் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போல் நாடகமாடி, சிலைகளை கடத்தி விற்க முயன்ற வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் அலெக்சாண்டர், காவலர்கள் இளங்குமரன், நாகநாகேந்திரன், கருப்பசாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் சிவன், விருதுநகரைச் சேர்ந்த கணேசனை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றபட்ட சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தது என்பது குறித்தும், அவற்றின் தொன்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விரைந்து செயல்பட்டு இந்த வழக்கில் சிலைகளை மீட்டதோடு மட்டுமல்லாமல் முக்கிய நபர்களை கைதுசெய்த தனிப்படை போலீசாரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி வெகுவாக பாராட்டினார். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சிலை திருட்டில் சிக்கிய அலெக்ஸாண்டரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில சிறுபான்மை அணி பிரிவு தலைவர் ஆசிம் பாஷா வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மை அணி மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அலெக்ஸாண்டர் அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1569

0

0