குழாய் உடைப்பால் 30 நாட்களாக வீணாகும் குடிநீர் : நடவடிக்கை எடுக்குமா குடிநீர் வாரியம்..? எதிர்பார்ப்பில் மக்கள்..!!

Author: kavin kumar
2 February 2022, 9:54 pm
Quick Share

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, மேம்பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக, அருகிலேயே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் உள்ள குடி தண்ணீர் குழாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் ஒரு அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கியவாறே இருந்து வருகிறது. இதுபோன்று தண்ணீர் தேங்கிய நிலையில் பல குழிகள் அங்குள்ளன.

எந்த நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற சூழல் இருப்பதால், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், அதேவேளையில் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புகார் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், 30 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வீணாகி வருகிறது.

இந்த மோசமான சாலையால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்கும் பகுதியில் உள்ள சாலையில் குழாய் உடைப்பால் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மாணவர்கள் பீதியுடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையால் ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, குடிநீர் வாரிய (TWAD) அதிகாரிகள் கவனம் செலுத்தி அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Views: - 974

0

0