பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்… போலீசார் முன்பு உடனே கத்தியை எடுத்த நபர் ; கோவையில் நடுரோட்டில் நடந்த ரகளை..!!

Author: Babu Lakshmanan
9 August 2023, 11:40 am
Quick Share

கோவையில் பிடிவாரண்டுக்காக போலீஸாரால் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நபர் போலீசாரமிருந்து தப்பி கத்தியை காட்டி தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் விரட்டி பிடித்தனர்.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில், தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணையானது கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பஷீர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நிலையில், போலீசார் பஷீரை பிடித்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் போலீசாரின் பிடியிலிருந்த பஷீர் திடீரென அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

அப்போது, சிறைக்கு போகமாட்டேன் என கூறி மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த கத்தியை தூக்கிக்கொண்டு ஓடிய பஷீர் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். மேலும், தனது இடது கையில் அறுத்துக்கொண்ட நிலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பஷிரை விரட்டுச் சென்றனர்.

பந்தய சாலை பகுதியில் உள்ள கேஜி திரையரங்கு வரை ஓட்டம் பிடித்த பஷீரை அப்பகுதியை கடந்து சென்ற அதிவிரைவு படையினர் வாகனத்தை நிறுத்தி விரட்டிப் பிடித்தனர். மேலும் பஷீரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கிய போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பஷீரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்திற்குள் சென்ற பஷீர் தான் சிறைக்கு செல்ல மாட்டேன் என நீதிபதி முன்பே அழுது புலம்பிய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Views: - 218

0

0