தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்து குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 12:54 pm
Fridge - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர் ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில்,
இன்று நடைபெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த, வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிஇழந்தார்.

இதனை அடுத்து அவருக்கு தாம்பரம் பகுதியில் திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா (வயது 63) அவரது தங்கை ராதா (வயது 55) , அவரது தம்பி ராஜ்குமார் (வயது 47) , ராஜ்குமாரின் மனைவி பார்கவி (வயது 35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (வயது 6) ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆர்ஆர் பிருந்தாவன், அப்பார்ட்மெண்டில் உள்ள முதல் மாடியில் , தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியத தொடர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர்.

கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது மூச்சு திணறி கிரிஜா, ராதா , ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 248

0

0