வரும் 24ம் தேதி 40 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்… தேர்தலில் அதிமுகவின் திட்டமே இதுதான் ; கேபி முனுசாமி ஓபன் டாக்..!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 9:56 pm
Quick Share

அதிமுகவின் பிரச்சாரம் பாஜக மற்றும் திமுகவை எதிர்த்தே இருக்கும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளார். இந்த நிலையில் பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் நடைபெறும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது :- வரும் 24ஆம் தேதி திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடைபெறுகிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் 40 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

கூட்டணி நிறைவாக முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். கோவையில் மோடி பங்கேற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து சம்பந்தப்பட்ட துறை துறையினர் நடவடிக்கை எடுக்கலாம்.

பிரதமர் மோடி தொடர்ச்சியாக ஜெயலலிதாவை புகழ்ந்து வரும் வேளையில் அவரால் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, அண்ணா, MGR, ஜெயலலிதாவை மிகவும் இழிவாக பேசியிருக்கிறார். அவ்வாறு இழிவாக பேசிய அண்ணாமலையை மோடி ஏன் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.

அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற சூழலில் திடீரென பாஜகவிற்கு ஆதரவளித்துள்ளது. இதற்கு தர்மம் அதற்கு நல்ல பதிலைக் கொடுக்கும். அதிமுகவின் பிரச்சாரம் பாஜக மற்றும் திமுகவை எதிர்த்தே இருக்கும்.

அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்காதது பலமா? பலவீனமா? என்ற கேள்விக்கு, எப்பொழுதும் ஒரு பலமான இயக்கத்திற்கு கூட்டணி என்பது தேவைப்படுகிற நேரத்தில் அவர்கள் விரும்புகிற நேரத்தில் ஏற்றுக் கொள்வோம். விரும்பாத பட்சத்தில் கட்சியின் பலத்தை வைத்துக் கொண்டே தேர்தலை சந்திப்போம். இதுவே அதிமுகவின் வரலாறு. பல நேரங்களில் நாங்கள் தனியாக நின்று மிகப்பெரிய வெற்றியை பெற்று அதிமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்க்கு உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும் பொழுது, நான் அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டவன் ஜெயலலிதா எனக்கு தெய்வம் எந்த காலத்திலும் அதிமுக அழிவதற்கு உறுதுணையாக இருக்க மாட்டேன் என்று கூறியவர், இன்று இரட்டை இலை கிடைக்கவில்லை என்றதும் அதை முடக்குவேன் என கூறியுள்ளது அவர் சுயநலவாதி என்பதை உறுதிப்படுத்தி உள்ளது, எனக் கூறினார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக என்ற மும்முனை போட்டி நிலவுகிறதா? அல்லது அண்ணாமலை கூறுவது போல திமுகவிற்கும், பாஜகவிற்கும் தான் போட்டியா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தேர்தல் முடிவுக்கு பின் யார் யாருக்கு போட்டி யாரோடு மோதி யார் வீழ்கிறார்கள்? யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரியும். அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம், அவர்கள் வழிவந்த எடப்பாடி பழனிசாமியால் கட்டி காக்கப்பட்டு வரும் இயக்கம். அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்த 30 ஆண்டு காலத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது, என்றார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளதா? என்ற கேள்விக்கு, ” பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

பேட்டின் போது திருச்சி மாவட்ட செயலாளர்கள் பா.குமார், பரஞ்சோதி, சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Views: - 102

0

0