விவசாயியாக மாறி அசத்தும் ஆசிரியர் : வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்து வருடத்திற்கு ரூ.2 லட்சம் ஈட்டும் ஆச்சரியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 6:06 pm
Water Apple -Updatenews360
Quick Share

தருமபுரி : வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்து வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் சம்பாதித்து அசத்தும் ஆசிரியரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்துள்ளார். இவர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக (அரசு பள்ளிகளில்) தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கமான விவசாயத்தை செய்வதற்கு பதில் மாற்று விவசாயத்தை ஏன் செய்யக்கூடாது என ஏற்பட்ட ஆர்வத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில் நூறு வாட்டர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து அவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில் மட்டும் இந்த வாட்டர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் செடி வளர்ந்த இரண்டு வருடங்களிலேயே வாட்டர் ஆப்பிள் அறுவடைக்கு வந்துவிடுவதாகவும், வருடத்தில் மூன்று முறை விளைச்சல் கிடைக்கிறது எனவும், வியாபாரிகள் பொதுமக்கள் தோட்டங்களுக்கே நேரிடையாக வந்து வாங்கி செல்கின்றனர்.

சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான வாட்டர் ஆப்பிள் தோட்டத்தில் நடவு செய்துள்ளார். சராசரியாக ஒரு கிலோ வாட்டர் ஆப்பிளின் விலை 50 ரூபாய் என கணக்கிட்டால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கையோடு சரவணன் தெரிவித்தார்.

மீதமுள்ள நிலத்தில் கொய்யா, மாதுளை, முள்சீத்தா, அத்தி போன்ற பழ வகைகளையும் பயிரிட்டுள்ளதாகவும், இது தவிர வாட்டர் ஆப்பிள் செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருவதாக கூறினார்.

மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது வாட்டர் ஆப்பிளை தருமபுரி மாவட்டத்திலும் இங்குள்ள பருவநிலையில் விளைவிக்க முடியும் என மற்ற விவசாயிகளுக்கு முன் மாதிரியாக இருந்து மற்றவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார் ஆசிரியர் சரவணன்.

Views: - 1015

0

0