ஸ்டாலின், உதயநிதி டி-சர்ட்… பாஜக வேட்பாளரை ஆரத்தழுவி நெகிழ்ந்த முதியவர் ; பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்..!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 5:16 pm

ஸ்டாலின், உதயநிதி டி-சர்ட்… பாஜக வேட்பாளரை ஆரத்தழுவிய நெகிழ்ந்த முதியவர் ; பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை வாரங்களே உள்ள நிலையில், திராவிட கட்சிக்கு மாற்றாக உருவெடுக்க வேண்டிய முனைப்பில் பாஜகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருபுறம் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது சொந்த தொகுதியான மத்திய சென்னையில் எப்படியாவது தாமரையை மலர வைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறார்.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக நாள்தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார். வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முதியவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் வாக்குசேகரித்து வருகிறார். செல்லும் வழி எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மலர் தூவியும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் தங்களின் அன்பையும், ஆதரவையும் வெளிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியிலும் மக்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

மத்திய சென்னையின் வேட்பாளர் கலாநிதி மாறன், வாரிசு என்ற ஒரு தகுதியை வைத்துக் கொண்டு மட்டுமே அடுத்தடுத்து தேர்தல்களில் போட்டியிடுவதாகவும், இனி மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், ஏழை மக்களுக்கு பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்றும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மைதானம் உள்பட விளையாட்டு உபகரணங்கள் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.

கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல ஆதரவும், வரவேற்பும் மக்களிடையே இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, மத்திய அரசின் திட்டங்களையும், திமுக அரசின் அவலங்களையும் மக்களிடம் எடுத்துச் சென்று பாஜகவினர் ஆதரவு கேட்பதால், ஆளும் கட்சிக்கு இந்தத் தேர்தல் மிக சவாலானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வாக்குசேகரிக்க சென்ற போது, வயதான நபர் ஒருவர் அவரை பார்க்க ஆவலுடன் காத்திருந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்த அந்த முதியவர், வினோஜ் பி செல்வத்தை கண்டதும், மகிழ்ச்சியில் அவரை பாராட்டி, கைகொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். இது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், பாஜகவினர் முதியவரின் அடையாளம் வேறாக இருந்தாலும், அவரின் விருப்பம் பாஜக தான் என்று மெச்சி வருகின்றனர். பாஜக உள்ளேயே வராது… உள்ளே வர அனுமதிக்க முடியாது… என்று திமுகவினர் கூறி வரும் நிலையில், அதனை தவிடு பொடியாக்கும் விதமாகவே இந்த நிகழ்வு அமைந்திருப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 268

    0

    0