முக்கிய பிரமுகருக்கு ஸ்கெட்ச்… அரிவாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த கும்பல் கைது ; தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 2:46 pm
Quick Share

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய பிரமுகரை படுகொலை செய்ய சதி திட்டத்துடன், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 ஆறு பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை படுகொலை செய்யும் நோக்கத்தோடு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கொலை,கொலை முயற்சி வழக்குகளில் கைதாகி ஜாமில் வெளிவந்த ரவுடிகள் ஆயுதங்களுடன் தூத்துக்குடி நகருக்குள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமாக 3 இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 6 நபர்களை பிடித்து சோதனை செய்தனர்.

மேலும் படிக்க: மனசாட்சியே இல்லையா..? தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன், பணம் திருட்டு.. திரும்பி வந்து கொள்ளையர்கள் செய்த சம்பவம்!!

அப்போது, அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் விருதுநகர் மாவட்டம், கம்பம்பட்டி தெருவை சேர்ந்த விஜய் ( எ) கருப்பசாமி (23), முத்தழகு என்ற அருள் (30), விருதுநகர் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சந்தனபாண்டி (21), விருதுநகர் ரோசன்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்த சக்திவேல்( 25 ), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வல்லரசு( 25 ), தூத்துக்குடி தாளமுத்துநகர் கோமாஸ்புரம் ராஜீவ்காந்தி குடியிருப்பைச் சேர்ந்த ராஜா (38 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதாகி ஜாமீரில் வெளிவந்திருப்பவர்கள் என்பதும், இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய பிரமுகரை படுகொலை செய்யும் நோக்கத்தோடு சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் யாரைக் குறி வைத்து கொலை செய்ய வந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய பிரமுகரை கொலை செய்யும் சதி திட்டத்தை முன்கூட்டியே அறிந்து தீவிரமாக செயல்பட்டு ஆறு பேர் கும்பலை கைது செய்த போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 272

0

0