நோயாளிகளை அலைக்கழிக்கும் தனியார் மருத்துவமனைகள்.. காப்பீட்டு திட்ட விளம்பரத்தை கட்டாயமாக்குக ; முதலமைச்சரின் தனி பிரிவுக்கு பாஜக மனு!!

Author: Babu Lakshmanan
28 December 2023, 11:55 am
Quick Share

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலையில், காப்பீடு திட்டம் உள்ள மருத்துவமனைகளில் விளம்பர பலகைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என முதலமைச்சரின் தனி பிரிவுக்கு பாஜக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பயன்பாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பயன்பாடுகள் குறித்த விளம்பர பலகைகள் வைக்க கட்டாயமாக்கப்பட வேண்டும் என கோவை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் தினந்தோறும் எதிர்பாராதவிதமாக ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் சிலருக்கு மோசமான நிலை ஏற்படுகிறது. இதனால், விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ள பயன்பாட்டுக்கு இருந்தும், நோயாளிகளிடம் இல்லை என கூறி வேறு மருத்துவமனைக்கு செல்ல அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் மத்திய மற்றும் மாநில அரசின் காப்பீடு திட்டம் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பயன்பாடுகள் குறித்து கட்டாயம் விளம்பர பலகை வைக்க வேண்டும் என பாஜக கோவை தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மண்டல தலைவர் சர்வேஷ் பிரசாந்த் தலைமையில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இ சேவை மூலம் பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

Views: - 172

0

0