யாரு சாமி இவரு…? மின்கம்பியில் செங்கல்லை கட்டி தொங்கவிட்ட மின்துறை அதிகாரிகள் ; அதிர்ந்து போன புகார் கொடுத்த விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 12:17 pm
Quick Share

கடலூர் அருகே மின் கம்பி உரசுவதால் செங்கல்லை கட்டி வைத்த மின்துறை அதிகாரிகளின் செயல் பேசு பொருளாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் சுடுகாடு அருகில் வயல்களில் உயரழுத்த மின்கம்பி மற்றும் குறைந்தழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் உயரழுத்த மின்கம்பி செல்லும் வழியில் அதன் கீழாக செல்லும் தாழ்வழுத்த மின் கம்பியானது ஒன்றையொன்று உரசிடும் விதத்தில் செல்கிறது.

இந்த இரண்டு மின் கம்பிகளும் ஒன்றை ஒன்று உரசி கொண்டால் மிகப் பரிய விபத்து மற்றும் மின் கம்பிகள் அறுந்து வயலில் விழுந்துவிடும் அபாய நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் இந்த மின்கம்பிகளை மாற்றி புதிய மின் கம்பிகளை சரியான உயரத்தில் அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் மின்வாரியத்துறை அதிகாரிகளோ அதனைக் கேட்டுக் கொண்டதோடு சரி, அதன்படி செய்யாமல் தங்களுக்கு வழங்கப்பட்ட புதுவிதமான பயிற்சியாக மின்வாரியத் துறை அதிகாரிகள் மின்கம்பிகள் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்க செங்கல்லை கட்டி தொங்க விட்டனர்.

மின்கம்பியின் மேல் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதால் மின் கம்பி அறுந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல் கட்டி தொங்கவிடப்பட்ட மின்கம்பிகள் பழைய கம்பிகளாக இருந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வயலில் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

மின்வாரியத்துறை அதிகாரிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாட்டை கண்டு வியந்த விவசாயிகள், மனம் நொந்து வேதனையடைந்து வருகின்றனர்.

உடனடியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கம்பிகளை அதற்குரிய அளவில் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Views: - 472

0

0