லஞ்சம் வாங்கிக்கொண்டு போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம் : அரசு அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்டவர் தனியாளாக தர்ணா!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 5:54 pm
Dharna - Updatenews360
Quick Share

விழுப்புரம் அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணம் மூலமாக பட்டா மாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் என்பவரது மகன் வைத்தியநாதன்.

இவர் தற்போது கோயம்புத்தூரில் பணி செய்து அங்கேயே தங்கி வசித்து வருகிறார். இந்த நிலையில், வைத்தியநாதனுக்கு சொந்தமான பூர்வீக நிலமானது அவரது தாத்தா பெயரிலிருந்து அவர் இறப்புக்கு பின்னர் தனது மகன் வழி பேரன் அல்லது பேத்திக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த உயிலை முற்றிலுமாக மறைத்துவிட்டு வைத்தியநாதனின் தகப்பனார் ராமநாதன் அவரது தம்பி சீனிவாசன் என்பவருக்கு பணம் பெற்றுக் கொண்டு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து வைத்தியநாதன் பலமுறை கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனுவாசன் என்பவர், வைத்தியநாதனின் உறவினருக்கு சாதகமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு செயல்படுவதாக கூறி வைத்தியநாதன் இன்று திடீரென கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீதி வேண்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட வைத்தியநாதனை வருவாய் வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தர்ணாவை கைவிட்ட வைத்தியநாதன், பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் தன்னிடம் உள்ள ஆவணங்களை சரி பார்க்காமல் அலைகழிப்பதாகவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் பதட்டமாக காணப்பட்டது.

Views: - 307

0

0