இதய பரிசோதனைக்காக சென்ற பெண்ணின் கை அகற்றம்.. அரசு மருத்துவமனைகளில் தொடரும் துயரம் ; விஜயபாஸ்கர் ஆவேசம்

Author: Babu Lakshmanan
27 September 2023, 4:22 pm
Quick Share

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக சென்ற பெண்ணின் கை அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதய (ஆஞ்சியோகிராம்) பரிசோதனைக்காக வந்த சென்னையைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால், வலது கை அகற்றப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்தாண்டு நவம்பரில் 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட சவ்வு பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் வலது காலை இழந்ததும்,

இந்தாண்டு ஆகஸ்ட்-ல் தலையில் நீர்க்கட்டி பிரச்னையால் அனுமதிக்கப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை தஸ்தகீர் வலது கை அகற்றப்பட்டு உயிரிழந்த கொடுமைச் சம்பவங்கள் இன்னும் ஆறாத வடுவாய் நிலைத்திருக்கிறது.

ஏழை-எளிய மக்களை அரவணைத்து அவர்களின் நலன் காக்கும் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் அரங்கேறுவது விடியா அரசில் வாடிக்கையாகி விட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அதேபோல், இரவு-பகல் பாராமல் விழிப்புடன் காத்திடும் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு இருக்கும் மிகப்பெரும் நம்பிக்கையை காப்பாற்றிட இனியாவது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வீர்!, என தெரிவித்துள்ளார்.

Views: - 307

0

0