வெள்ளலூர் பேருந்து நிலையத்தை போல கிடப்பில் போன மெட்ரோ ரயில் திட்டம்…? கானல் நீராகிப்போன கோவை மக்களின் எதிர்பார்ப்பு..!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 4:36 pm
Quick Share

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, ரூ. 9424 கோடி மதிப்பீட்டில் 139 கி.மீ. தொலைவுக்கு கோவை மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. முதல் கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி முதல் கருமத்தம்பட்டி வரையும், 2வது கட்டமாக உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரை செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Metro - Updatenews360

இதனிடையே, கடந்த ஜூலை 15ஆம் தேதி கோவை மெட்ரோவுக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, கோவைக்கு விரைவில் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் என கோவை மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஜெர்மன் வங்கி நிதியுதவி வழங்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கல்களால், வேறு பன்னாட்டு வங்கியும் நிதியுதவி பெறுவதில் சிரமம் என்பதால், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களைத் தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவை மெட்ரோ திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், அதன் பிறகு எந்தவொரு கூட்டமும் நடத்தப்படாததே அதற்கு சாட்சியாகும். இது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவையில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு வந்த வெள்ளலூர் பேருந்து நிலையம் சுமார் 65 % பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.

அதேவேளையில், இந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அப்படியொரு திட்டமே இல்லை என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பேருந்து நிலையத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு என்ற குழுவை அமைத்து, இதற்காக போராடி வருகின்றனர்.

ஏற்கனவே, திமுக சார்பில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கிடப்பில் போட்டுள்ளதைப் போன்றே, கோவை மெட்ரோ திட்டமும் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது கோவை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Stalin - Updatenews360

தமிழக அரசு நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் வேளையிலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலவசங்களை அறிவித்து அதனை வழங்கி வரும் திமுக அரசு, மக்கள் நலத் திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் அந்த முனைப்பை காட்டாதது ஏன்..? என்று கோவையைச் சேர்ந்த எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 257

0

0